தேவையற்ற கதை வேண்டாம் - மே மாதம் இரு விவாதங்களுக்கும் நாம் தயார் - நீங்களும் தயாராகுங்கள் - சஜித் பிரேமதாச!
பொருளாதாரக் குழுக்களுக்கு இடையிலான விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயங்குவது போல் தெரிகிறது.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி குழுவாக இரு விவாதங்களுக்கும் தயாராக உள்ளது.
இந்த இரண்டு விவாதங்களுக்கும் மே மாதத்திலேயே திகதிகளை ஒதுக்கிக் கொள்ளுமாறும், ஒரு விவாதம் குறித்து மட்டும் பேசி வெறும் வாய்ப் பேச்சு வீரராகாது இருக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான மற்றும் யதார்த்தமான தரவுகளை மையமாகக் கொண்ட பொருளாதாரப் பார்வை மற்றும் திட்டத்தைக் கொண்ட குழு ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது.
வாய்ப் பேச்சு மட்டுமுள்ள தலைவரிடம் வாயப்பேச்சு மட்டுமே உள்ள குழுவும், ஐக்கிய மக்கள் சக்தியிடம் சொன்னதைச் செய்யும், செய்வதைச் சொல்லும் குழுவும் இருப்பதால், இந்த இரண்டு விவாதங்களும் மே மாதம் நடத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாது, நாட்டுக்காகப் பணியாற்ற முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் கீழ், 170 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கம்பஹா, மீரிகம, கல்எலிய அலிகார் தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 03 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலையின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுக்களுக்கு ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் வழங்கி வைத்தார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலையையும் ரோயல் கல்லூரி போன்று மாற்ற விரும்புகிறேன்.
'பஸ் மேன்' என்று பட்டம் சூட்டியவர்கள் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பஸ்களை வழங்கி வைத்தேன்.
கண்ணங்கரவின் இலவசக் கல்வி இதன் மூலம் வலுப்பெறும். கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் அனைத்து வளங்களும் உள்ளன.
இந்நாட்டில் உள்ள 10126 பாடசாலைகளையும் உண்மையாகவே ரோயல் கல்லூரி போன்ற வசதிகள் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதே எனது நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
எமது இந்த இலக்கு குறித்து சிலருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளன.
எனவே, அவர்கள் வெவ்வேறு பெயர்களை எனக்கு சூட்டி வருகின்றனர்.
இவ்வாறு பொறாமை கொண்டு பல்வேறு பெயர்களை சூட்டிவரும் தரப்பினரின் பிள்ளைகள் தனியார் பாடசாலைகளிலும், தனியார் பல்கலைக்கழகங்களில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நாட்டின் தேசிய கல்வி முறையில் மருத்துவம், சட்டம், பொறியியல், வர்த்தகம் போன்ற துறைகளைத் தவிர்ந்து, கலைத்துறையில் வேலைவாய்ப்புகள் பற்றாக்குறையாக உள்ளதால், இந்த முறையை மாற்றி ஆங்கில வழிக் கல்விக்கு இடமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு நிகரான தகவல் தொழில்நுட்ப கேந்திர நிலையம் இலங்கையிலும்.
இந்தியாவைப் போன்று நமது நாட்டையும் தகவல் தொழில்நுட்பத்துக்கான கேந்திர முக்கியத்துவமிக்க நாடாக மாற்ற விரும்புகிறோம்.
இதன் மூலம், நமது நாட்டுத் தொழிலாளர்களை அமெரிக்காவின் Silicon Valley தொழிற் சந்தைக்கு அனுப்ப முடியும்.
இதன் காரணமாக பாடசாலை பருவத்திலயே தகவல் தொழில்நுட்ப பரீட்சயத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கான வசதிகளை பாடசாலைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும்.
இதனை இலக்காக் கொண்டு ஆரம்ப படியாக ஒன்பது மாகாணங்களிலும் சர்வதேச தரத்திலான தகவல் தொழிநுட்ப மையம், தொழிநுட்ப மையம், முகாமைத்துவ மையங்கள் நிறுவப்பட்டு, பின்னர் 25 மாவட்டங்களையும் இலக்காக் கொண்டு இவை நிறுவப்படும்.
இவை அனைத்தும் அரச நிதியில் இன்றி, வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளில் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க நாம் முன்நிற்போம்.
இன்று சர்வதேச பத்திரிக்கையாளர் தினம், நாம் ஊடக சுதந்திரத்திற்காக முன்நிற்க வேண்டும்.
ஊடக சுதந்திரம் இருக்கும் ஓர் நாட்டில் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளும், தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையும் ஊடக சுதந்திரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஊடக சுதந்திரத்திற்காக நிபந்தனையின்றி முன்நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஊடக சுதந்திரத்தில், மக்களுக்கு உண்மைத் தகவல்களைத் தெரிவிப்பதும், ஆதாரத்துடன் தகவல்களை முன்வைப்பதும் பொறுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும். மக்களின் மனசாட்சியை நன்கு அறிந்த, படித்த, புத்திசாலித்தனமான ஊடகத்துறையினர், நாட்டுக்கு உண்மை தகவல்களை, நிலையை தெரிவிக்கும் கடமையை நிறைவேற்றுவார்கள் என நம்பப்படுகிறது.
இந்த ஊடக சுதந்திரத்திற்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மே தினம் காரணமாக பிரபஞ்சம் வேலைத்திட்டங்களுக்கு சிறிது இடைவெளி எடுக்க வேண்டி ஏற்பட்டாலும், நாம் இந்த பணிகளை மீண்டும் ஆரம்பித்துவிட்டோம். எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் இவ்வாறான சேவையை செய்ததில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.