யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
யாழில் (Jaffna) எலிக்காய்ச்சல் நோய் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாள் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அன்றைய தினமே நோயின் தீவிர நிலை உணரப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
'யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருகின்றது.
இக் காய்ச்சலானது எலிக் காய்ச்சலாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இக் காய்ச்சல் எந்த வகையானது என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
எலிக்காய்ச்சலானது மழை வெள்ளத்தில் எலி, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் எச்சங்கள் கலப்பதன் மூலம் இந்நோய்க்கிருமிகள் வெள்ள நீரில் கலக்கின்றன.
பொதுமக்கள் இந்த வெள்ளநீருடன் தொடுகை ஏற்படும் போது அவர்களது தோலிலுள்ள சிறு காயங்கள், புண்கள் மூலம் உடலின் குருதிச் சுற்றோட்ட தொகுதியை சென்றடைந்து எலிக்காய்ச்சல் நோய் உண்டாகின்றது.
மேலும் இக்கிருமிகள் கலந்த அசுத்தமான நீரைப் பருகுவதனாலும் எலிக்காய்ச்சல் நோய் ஏற்படலாம். இக்காய்ச்சலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்வரும் விடயங்களை பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலையை நாடவும்.
காய்ச்சல் ஏற்பட்டு தாமதமாக அரச வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தமையினாலேயே பெரும்பாலான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மருத்துவ ஆலோசனையின்றி நேரடியாக மருந்தகங்களில் மருந்துகள் வாங்கிப் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
தற்போதைய காலப்பகுதியில் அவசியமின்றி வெள்ள நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும். வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் கால்களுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொள்ள வேண்டும்.
கால்களில் காயங்கள் அல்லது புண்கள் உள்ளவர்கள் வெள்ள நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும். கட்டாயமாக கொதித்து ஆறிய நீரைப் பருகவும். வெள்ள நீரினால் அசுத்தமான கிணறுகளை இறைத்து குளோரின் இடவும்.
தற்போதைய காலப்பகுதியில் வெள்ள நீரால் நிரம்பியுள்ள குளங்களில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே பொதுமக்கள் மேற்படி ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
தற்போது வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளாக வீடுவீடாக சென்று எலிக்காய்ச்சல் தடுப்பதற்க்காக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன் தடுப்பு மருந்தாக 'doxicycline' வழங்கப்பட்டு வருகிறது.
ஆம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சிவசுதன் தலமையிலான குழுவினரே இவ்வாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைய நாட்களாக வடமராட்சி பகுதியில் சில மரணங்கள், மற்றும் தொற்றுக்கு உள்ளான பலர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். வடமராட்சி பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் எலிக்காய்ச்சல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிராமங்கள் தோறும் செல்லும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன.
பருத்தித்துறை நகர சபை பகுதியிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னதாக, இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 1882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, கிரியெல்ல, எலபாத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகும்.
எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
எலிக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை வேலைகளுக்காக செல்பவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாக பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2023 இல் எலிக் காய்ச்சலால் 1,400 பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன், 2024 இல் அந்த எண்ணிக்கை 1882 ஆக அதிகரித்துள்ளது.