சி.சி.டி.வியை மூடிவிட்டு உறங்கிய ஊழியர்கள் - மூன்றரை லட்சத்தை பறிகொடுத்த சோகம்!
யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிய நபரை நேற்று (03) நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் இருவர் இரவில் அங்கேயே உறங்க வேண்டியிருப்பதால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராக்களை துணி மற்றும் பிளாஸ்டரால் மூடிவிட்டு உறங்கியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சிசிடிவி கமராக்களை பரிசோதித்தால், அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பது தெரியவரும் என்பதால், கமராக்கள் மூடப்பட்டதாக, இரண்டு ஊழியர்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் ஊழியர் ஒருவரின் கைத்தொலைபேசியையும், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணத்தில் ஒரு இலட்சம் ரூபாயையும் திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் யாழ்.நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து ஏனைய இடங்களில் உள்ள சிசிடிவி கமெராக்களை சோதனையிட்ட பொலிஸார் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.