புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் : திட்டமிடல் பணிப்பாளர் கைது!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சையின் வினாத்தாள் கசிந்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை கூறப்பட்டதை அடுத்து, பரீட்சைகள் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தநிலையில், முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள், தற்போதைய பிரச்சினை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்
மூன்று வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள்
அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்து சம்பந்தப்பட்ட விசாரணைகளின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாளை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை அடுத்தே இந்த பிரச்சினை வெளியில் தெரியவந்தது.
இந்த ஆண்டு; புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் இடம்பெற்றதுடன், 323,879 பரீட்சார்த்திகள் அதில் பங்குபற்றினர்.