கைது செய்யப்பட்ட  சிங்கள நடிகையும் அவரது கணவரும் இன்று  நீதிமன்றுக்கு! 

கைது செய்யப்பட்ட  சிங்கள நடிகையும் அவரது கணவரும் இன்று  நீதிமன்றுக்கு! 

தென்கொரியாவில் வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 3,000,000 ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள நடிகையான தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
 
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
 
அதன்பின்னர், கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

தமிதா அபேரத்னவும் அவரது கணவரும், கடந்த 27ஆம் திகதி தம்மை கைது  செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த  போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.

பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தமிதா அபேரத்னவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பல தடவைகள் சென்ற போதும் அவர் வீட்டில் இருந்திருக்கவில்லை.
 
இந்த நிலையில், இருவரையும் கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது.

தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்  கோரிக்கை  விடுத்தது.

அதற்கமைய, அவர்களுக்கு பயணத் தடை விதிக்குமாறும் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.