மக்களின் ஞாபகங்களை பயங்கரவாதம் என்று கூறுவது கேடுகெட்ட மனித உரிமை மீறலாகும் - பு.துசானந்தன்!

மக்களின் ஞாபகங்களை பயங்கரவாதம் என்று கூறுவது    கேடுகெட்ட மனித உரிமை மீறலாகும் - பு.துசானந்தன்!

எமது மக்களின் ஞாபகங்களை பயங்கரவாதம் என்று கூறி சிங்களத் தேசியமும், பாதுகாப்புப் பிரிவும் செயற்படும் விதமானது கேடுகெட்ட மனித உரிமை மீறலாகும் என 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பு.துசானந்தன் தெரிவித்துள்ளார். 

இனியொரு போதும் தமிழர்களின் உணர்வெழுச்சியை எந்தத் தடையுத்தரவுகளும் தடுத்துவிட முடியாது என்பதற்கு இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பாடமாக அமையும்.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டதுடன், நினைவேந்தலும் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பு.துசானந்தன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் கரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரகள், பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு செயற்பாட்டாளர்கள் நால்வருக்கு எதிராகத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அத்தடை நீக்கம் செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் எழுச்சி பூர்வமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று பாண்டிருப்பில் குறித்த இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது துசானந்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

மனிதாபிமான யுத்தம் என்ற போர்வையில் சர்வதேசத்தின் கண்களைக் கட்டி அந்த சர்வதேசத்தின் வஞ்சனையுடன் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாரியதொரு இனவழிப்பு இந்த முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமாகும்.

எமது மக்களின் ஞாபகங்களை பயங்கரவாதம் என்று சொல்லிக்கொண்டு சிங்களத் தேசியமும், பாதுகாப்புப் பிரிவும் செயற்படும் விதமானது கேடுகெட்ட மனித உரிமை மீறலாகும். 

இந்த நிலைமைகளை சர்வதேசம் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிப்பதும் தமிழர்களுக்கு சர்வதேசத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைக்கும் விதமாகவே அமையும். 

இதனை சர்வதேசம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

எமது இந்த நினைவுகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புத் தரப்பினால் தடையுத்தரவு என்ற பேரில் பல முட்டுக் கட்டைகள் போடப்பட்டன. 

ஆனால் இன்று அவை தகர்த்தெறியப்பட்டு மேலோங்கிய எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றன. 

இனியொரு போதும் தமிழர்களின் உணர்வெழுச்சியை எந்தத் தடையுத்தரவுகளும் தடுத்துவிட முடியாது என்பதற்கு இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இலங்கை அரசுக்கு ஒரு பாடமாக அமையும் என்று தெரிவித்தார்.