மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி யாழில்

மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி யாழில்

இளைஞர்களுக்கு வலுவூட்டவும், மாணவர்களுக்கிடையேயான விளையாட்டுப் பண்பையும் ஆற்றலையும் ஊக்குவிக்கவும் இலங்கையின் புகழ்பெற்ற தமிழ்ப் பாடசாலைகளான இந்துக்கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிகளுக்கிடையிலான "இந்துக்களின் சமர்" என வர்ணிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வருடாந்த கிரிக்கெட் போட்டியானது எதிர்வரும் 2025 பெப்ரவரி மாதம் 7ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இது தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றைய தினம் மாலை கொழும்பு தமிழ் யூனியன் விளையாட்டுக்கழகத்தின் பி. சாரா சர்வதேச விளையாட்டரங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்துக்களின் பெருஞ்சமரின் பிரதான அனுசரணையாளரான ஜனசக்தி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான திரு. சந்திரா ஷாப்டர் மற்றும் குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சாமிக்க டீ சில்வா ஆகியோர் அனுசரணையாளர்களாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சார்பாக பழைய மாணவ சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வசந்தன், கிரிசாந்த் மற்றும் சுலக்ஷன் ஆகியோரும் இந்துக் கல்லூரி கொழும்பு சார்பாக பழைய மாணவ சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளங்கோ ரத்னசபாபதி, அருள்மொழி மற்றும் நவக்குமார், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, இந்துக்களின் பெருஞ்சமரின் பிரதான அனுசரணையாளரான ஜனசக்தி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சந்திரா ஷாப்டர்...

"இளைஞர்களை தயார்ப்படுத்துவதிலும், மீட்சியுடனான சமூகங்களை கட்டியெழுப்புவதில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகின்றது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தொடருடன் தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.

இலங்கையின் இளைஞர்களுக்கு வலுவூட்டல் மற்றும் இலங்கையின் உயர்வான கலாசார பாரம்பரியங்களை பேணுதல் போன்ற எமது நோக்களுடன் இந்த அனுசரணை சிறந்த வகையில் பொருந்துவதாக அமைந்துள்ளது.

JXG இந்துக்களின் சமர்" போட்டியிலூடாக திறமையை கட்டியெழுப்பும் பண்பாளர்களை கட்டியெழுப்பும் மற்றும் சமூக பிணைப்புகளை வலிமைப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்... என்றார்...‌ 

மேலும், இவ்வூடக சந்திப்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பாகவும் இந்துக் கல்லூரி கொழும்பு சார்பாகவும், கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தினரால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. 

இந்நிகழ்வின் இறுதியில் பிரதான அனுசரணையாளரான ஜனசக்தி குழுமத்தினால் அனுசரணைக்கான காசோலையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது...