சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல் - ஐ.பி.எல்

வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஒஃப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. தொடக்க போட்டியில் தனது சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரணடைந்தது. 7-வது போட்டியில் லக்னோவை தோற்கடித்து ஒருவழியாக வெற்றிப் பாதைக்கு திரும்பியது. ஆனால் அந்த உத்வேகத்தை நீடிக்க முடியாமல் கடந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் பணிந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 177 ஓட்ட இலக்கை மும்பை 15.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 20 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் சென்னை அணியால் இன்னும் சரியான கலவையை கண்டறிய முடியவில்லை.
சென்னை அணிக்கு இனிமேல் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாகும். எஞ்சிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் 'பிளே-ஒஃப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே 2010-ம் ஆண்டு போல் சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு வந்து சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
சென்னை அணியில் துடுப்பாட்டம் பெரும் தலைவலியாக இருக்கிறது. ஷிவம் துபே (230 ஓட்டங்கள்) தவிர யாரும் 200 ஓட்டங்களை கடக்கவில்லை. விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆடி ஓட்டங்களை சேர்க்க வேண்டியது அவசியமானதாகும். கடந்த போட்டியில் அறிமுகமான 17 வயது ஆயுஷ் மாத்ரே துரிதமாக 32 ஓட்டங்களை எடுத்து கவனத்தை ஈர்த்தார். புதிதாக அணிக்கு அழைக்கப்பட்ட அதிரடி வீரர் டிவால்ட் பிரேவிஸ் (தென்னாப்பிரிக்கா) களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா வலுசேர்க்கிறார்கள்.
முன்னாள் சம்பியனான ஐதராபாத் அணிக்கும் இந்த சீசன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. அந்த அணி 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் தகிடுதத்தம் போட்டு வருகிறது. தனது முதல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ஓட்டங்கள் குவித்த ஐதராபாத் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு வரிசையாக 4 போட்டிகளில் (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) தோற்றது. 6-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. அடுத்து மும்பைக்கு எதிரான 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி கண்டது.
புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணிக்கும் இனி வரும் அனைத்து போட்டிகளும் இன்றியமையானதாகும். ஒன்றில் தோற்றால் கூட அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும்.
ஐதராபாத் அணியில் துடுப்பாட்டத்தில் ஹென்ரிச் கிளாசென் (281 ஓட்டங்கள்), டிராவிஸ் ஹெட் (242), அபிஷேக் ஷர்மா (240), இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி என்று அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை. அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் தான் அந்த அணி தடுமாறி வருகிறது. ஹர்ஷல் பட்டேல், தலைவர் கம்மின்ஸ், முகமது ஷமி, இஷான் மலிங்க, ஜீஷன் அன்சாரி ஓரளவு நன்றாக பந்து வீசுகின்றனர்.
அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டியது அவசியமானது என்பதால் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் இங்கு வீழ்ந்த 50 விக்கெட்டுகளில் 27-ஐ சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15 போட்டிகளில் சென்னையும், 6 போட்டிகளில் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. சேப்பாக்கத்தில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான 5 போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், தோனி (தலைவர்), ஜாமி ஓவர்டான் அல்லது டிவால்ட் பிரேவிஸ், ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, பதிரான.
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (தலைவர்), ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் சாஹர் அல்லது ஜீஷன் அன்சாரி, காமிந்து மென்டிஸ் அல்லது இஷான் மலிங்கா.