பிரதமரை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தாத வகையில், விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் இந்த விவகாரத்தில் மட்டும் மவுனகுருவாக இருப்பது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள X வலைதளப் பதிவில், கடந்த காலத்தில் தி.மு.க செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் மோடி கூசாமல் பொய் பேசுகிறார் என விமர்சித்துள்ளார்.
தி.மு.க அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
எனவும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்?
எனவும் முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார். அவர்கள் இந்தியர்கள் இல்லையா?
எனவும் அவர் கேட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான் எனவும் விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள் எனவும் இது அரிதாரங்கள் கலைகிற காலம் எனவும் அவர் கூறியுள்ளார்.