தொடர்ச்சியாக நீர் விநியோகத்தை வழங்குவதில் தடைகள்
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியாக நீர் விநியோகத்தை வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளாந்த நீர் விநியோகத்திற்கான தற்போதைய தேவை அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக சில பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த அல்லது குறைந்த அழுத்தத்தில் நீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையினை கருத்திற்கொண்டு பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை வலிறுயுத்தியுள்ளது.
வெப்பமான காலநிலை காரணமாக குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அந்த சபை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த மாவட்டத்தில் 37.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதேவேளை, தற்போது நிலவும் வெப்பமான காலநிலையினால் கொஸ்லந்தை - ஹீவல்கதுர பகுதியில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மலையகத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் தற்போது படிப்படியாக குறைவடைந்து வருவதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.