மலையக வரலாற்றில் பிரம்மாண்ட முறையில் தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் இன்று (21) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய தைப்பொங்கல் விழாவில், 1,008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் வெகு விமர்சையாக நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன், கோலப்போட்டி, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம், பொங்கல் பொங்கும் போட்டி உட்பட பல பாரம்பரிய போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன மத்திய மாகாண ஆளுநர்களான லலித்யு கமகே, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சால்ஸ், வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது நுவரெலியா மாவட்ட செயலாளர் வரவேற்பு உரையினை வழங்கி வைத்ததுடன் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. இதன்போது தென்னிந்திய களைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.