தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று முன்தினம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக அறிவிக்கப்பட்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு இன்றைய தினம் காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசிலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது.
நடத்தப்படும் பேரணியை 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்ற நீதவான் தெரிவித்தார். இவ் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சுகாஷ் ஆஜராகினார்.
இதேவேளை, திலீபனின் 6 ஆம் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் நாளாந்தம் காலை 9 மணிக்கு இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை பொதுச் சுடர் ஏற்றிவைக்கப்பட்டதுடன், நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த பகுதியில் பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.