அனுமதியின்றி மலை உச்சியில் முகாமிட இடமளிக்க வேண்டாம் - வனத்துறைக்கு கடும் அறிவிப்பு!
தலவாக்கலை - கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் அனுமதியின்றி முகாமிட இடமளிக்க வேண்டாம் என நுவரெலியா அரசாங்க அதிபர் நந்தன கலபட, வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மாவட்ட செயலாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜே. அம்பகஹவத்த லிந்துல காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த பெண் ஒருவர் அல்லது சில தரப்பினருடன் மலை உச்சியை அடைந்துள்ளதாகவும், சில காரணங்களால் அவர் உயிர் இழந்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் இருந்து இந்த பெண்ணின் சடலத்தை எடுத்துவரச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவரும் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இனம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கல்கந்தை மலை உச்சி சரிவு பகுதியில் காணப்பட்டமை தொடர்பில் லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு 1 ஆம் திகதி மாலை தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்ததாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு மரண விசாரணை செய்வதற்கான நேரம் போதாத நிலையில் நீதிபதி (02.08.2023) முற்பகல் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.
இவருடன் பொலிசார்,இராணுவத்தினர் என பலர் சென்றிருந்தனர் பின் சடலம் மீட்க்கப்பட்டு சம்பவ இடத்தில் நீதிபதி விசாரணையின் பின் சடலம் சட்ட பிரேத பரிசோதணைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பணிக்கப்பட்டது.
அத்துடன் மலை உச்சி பகுதிக்கு நடந்து சென்ற வேளையில் இராணுவ வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பில் அவர் வழியில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடலத்தையும்,இராணுத்தால் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தையும் அரும்பாடுபட்டு சுமந்து கொண்டு மலையடிவாரத்தில் வந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.