உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் - யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் - யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்த நிலையில் நேற்று மாலை யாழப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடந்த 14ம் திகதியிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த உப்பளத்தின் தற்போது உள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் தம்மை பழிவாங்குவது போன்று செயற்படுகின்றனர் எனவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன் தமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை எனவும் தமக்கான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை எனவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

மேலும் மனித வலு இருக்கும் போது இயந்திர வலுவை பயன்படுத்துகின்றனர் எனவும், ஊழியர்க்ளுக்கு சீருடைகள், பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆனையிறவு உப்பள ஊழியர்கள் சார்பாக துரித விசாரணைகளை மேற்கொள்வதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.