இந்தியாவிலிருந்து வரும் மாசடைந்த காற்றால் கிழக்கிலங்கைக்கு பாதிப்பு!

இந்தியாவிலிருந்து வரும் மாசடைந்த காற்றால் கிழக்கிலங்கைக்கு பாதிப்பு!



இந்தியாவிலிருந்து பரவும் மாசடைந்த வளி காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று தோற்றமளிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில்  மூடுபனியை ஏற்படுத்தியுள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “புது டெல்லியில் இருந்து காற்றோட்டமானது ஒரு வட்ட இயக்கத்தில் பரவலடைந்து வருகின்றது. அது டெல்லியில் இருந்து வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கிறது. 

வங்காள விரிகுடாவில் இருந்து சுழன்று செல்லும் இந்த காற்று கிழக்கு மாகாணத்தின் ஊடாக இலங்கைக்குள் நுழைகிறது. இது இலங்கையின் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

விரைவில் காற்றுடன் சிறிது ஈரப்பதமும் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இதன் விளைவாக சிறிதளவில் மழை பெய்யும். இதனால் மூடுபனி குறையும். 

இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இருந்து மேலும் காற்றோட்டம் இருக்கும் என்று தெரிகிறது. தற்போது இலங்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நுவரெலியாவில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் திணைக்களம் உறுதியளித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நேற்று மாலை நிலவரப்படி 6 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மன்னாரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.