போலி ஆவணங்களுடன் வீட்டு பாவனை பொருட்களை கொள்வனவு செய்தவர் கைது!

போலி ஆவணங்களைக் கொண்டு மோசடியாக பாரியளவில் வீட்டுப்பாவனைக்குரிய மின் விசிறிகளை கொள்வனவு செய்த ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

போலி ஆவணங்களுடன் வீட்டு பாவனை பொருட்களை கொள்வனவு செய்தவர் கைது!

போலி ஆவணங்களை தயார் செய்த குறித்த நபர் சமையல் எரிவாயு அடுப்புகள் மற்றும் மின் அடுப்புகளையும் கொள்வனவு செய்துள்ளார்.

ஒன்லைன் வாயிலாக போலி ஆவணங்களையும் அதற்கான கட்டளைகளையும் சமர்ப்பித்து கொழும்பு - புறக்கோட்டை மற்றும் அத்துருகிரிய ஆகிய பகுதிகளிலுள்ள மொத்த விற்பனை நிலையங்களில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இயங்கும் விற்பனை நிலையங்களின் பெயர்களில் குறித்த போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பொருட்களை கொள்வனவு செய்த குறித்த நபர் தெற்கு அதிவேக பாதையில் பொருட்களுடன் பாரவூர்தியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரால் மோசடி செய்யப்பட்ட 143 எரிவாயு அடுப்புகள், 40 மின் அடுப்புகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கட்டுநாயக்க பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வீடுகளை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்ட இரு பெண்கள் உள்ளிட்ட அறுவர் வெள்ளவத்தை பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 30 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய மின் உபகரணங்கள், தொலைக்காட்சி பெட்டிகள் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சில பொருட்கள் சந்தேக நபர்களின் வீடுகளிலிருந்தும், ஏனைய பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின் போதைபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் மட்டக்குளி பகுதியில் வசிக்கும் 30 முதல் 40 வயதுக்கிடைப்பட்டவர்களாவர்.

இதேவேளை, கட்டார் நாட்டில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து நிதிமோசடியில் ஈடுபட்ட எப்பாவெல பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 16 இலட்சம் ரூபாய் நிதிமோசடி செய்துள்ளார் எனவும் முதல்கட்ட விசாரணைகளில் அறியகிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.