3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டண திருத்தம்? கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - தீபமேற்றி போராட்டம்!
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என சக்தி வலுத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், புதிய மின்சாரத்துறை சட்டமூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 6 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் மின்கட்டண திருத்தத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (22) பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் யக்கல நகரில் நேற்று பிற்பகல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பொதுமக்கள் தீபங்களை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி நகரிலும் தீபம் ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தீப்பந்த போராட்டம் காரணமாக கொழும்பு - ஹோமாகம பிரதான வீதியில் கடும் வாகன நெரில் ஏற்பட்டுள்ளது.
மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக பன்னிப்பிட்டிய அரச மரத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மஹரகம மற்றும் பன்னிப்பிட்டியவுக்கு இடைப்பட்ட பகுதியில் அதிகளவான வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் உள்ளன.