முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்து கொலை - சந்தேக நபர் கைது!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் க.பரஞ்சோதி இன்று (29) பிற்பகல் சென்று பார்வையிட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது,
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் பெரிய தந்தைக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தலையில் தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த இருவரும் இராணுவத்தினரின் முகாமில் இருந்து அகற்றப்படும் இரும்புகளை விற்பனை செய்து வந்துள்ளார்கள்.
அதனால் ஏற்பட்ட பண பரிமாற்றம் தொடர்பிலான தகராறால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (67) கைவேலி பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் அதேபகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கதக்க இராணுவத்தில் பணியாற்றும் நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் க.பரஞ்சோதி சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை பார்வையிட்டதுடன், இது தொடர்பான முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.