தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ கோரிக்கையின் சாதக தன்மை,
தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவும் கோரிக்கைக்கு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று தென்கொரிய தமிழ்ச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று கொரியாவில் வசிக்கும் பல்லின சமுக குடும்பங்களுக்கிடையேயான உரையாடலை ஊக்குவிக்கும் கூடுதல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஸ்யா, சீனா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாட்டை சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டனர். இன் நிகழ்விற்கு தலைமை வகித்த கொரிய ஜனாதிபதியின் சமூக இணைப்பிற்கான உதவி செயலாளர் சுங் சாம் யங், பங்கேற்பாளர்கள் மத்தியி;ல் பல்லின மக்களின் குறைகள் மற்றும் வேண்டுகோள்களை கேட்டறிந்தார்.
இதன்போது உலகப்பொதுமறையை தந்த தத்துவஞானியான திருவள்ளுவரின் சிலையை சொங்ஜு நகரில் நிறுவவேண்டும் என்று கோரிக்கையை கொரிய தமிழ்ச்சங்கம் முன்வைத்தது. ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த கோரிக்கையை பெற்றுக்கொண்ட கொரிய ஜனாதிபதியின் சமூக இணைப்பிற்கான உதவியாளர், கொரிய மொழியில் கோரிக்கையை அரசுக்கு முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அத்துடன் இதற்கு விரைவில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான நல்ல பதில் வரும் என்றும் உறுதியளித்ததாக கொரிய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அரவிந்த ராஜா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின்போது, திருவள்ளுவர் சிலை, தஞ்சாவூர் பொம்மைகள், கருப்பட்டி, நடன அணிகலன்கள் மற்றும் தமிழ்நாட்டு கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் கொரியா தமிழ் சங்கத்தின் மூத்த உறுப்பினரான முனைவர் தெ.சு. பிரபாகரன்,சங்கத்தின் தலைவர் அரவிந்த ராஜா,மேனாள் தலைவர் முனைவர் இராமசுந்தரம், செயலாளர் சரவண்ணன், துணைப்பொருளாளர் ஜெரோம் பீற்றர் உட்பட்டவர்கள் பங்கேற்றனர்.