உழவு இயந்திரத்தால் கரைவலை இழுத்த மீனவர்கள் - பொலிஸாருடன் மோதல்!

உழவு இயந்திரத்தால் கரைவலை இழுத்த மீனவர்கள் - பொலிஸாருடன் மோதல்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர்கள் குழுவொன்று நேற்று (03) பிற்பகல் கடற்றொழில் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாக  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதி மீனவர்கள் மீன்கள் நிரம்பிய வலைகளை உழவு இயந்திரங்களில் கட்டி கரைக்கு இழுத்துச் செல்லும் வழக்கத்தை நீண்ட காலமாக கொண்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையை அண்மையில் கடற்றொழில் பரிசோதனை காரியாலயம் தடை செய்திருந்தது.

இந்தநிலையில் நேற்றும் மீனவர்கள் இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முற்பட்ட போது  மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தடை குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மீனவச் சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிலைக்கேணி பகுதி மீனவர்கள் மட்டும் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்க தொடங்கிய போதே அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் இரு தரப்புக்கிடையில் சமரசம் மேற்கொள்ள வந்த பொலிஸாரையும் மீனவர்கள் தாக்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மருதங்கேணி பொலிஸார் இந்த மோதல் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பரிசோதனை காரியாலயத்தினால் மீனவர்கள் தொடர்பில் தனியான விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.