உத்தியோகபூர்வமற்ற நீதவான் வசூலித்த அதிக கட்டணம் - சட்டவிதி மீறலுக்கு அபராதம்!
சிறிய தொகையை அபராதமாக விதித்து சட்டவிரோதமான முறையில் ஒருவரை விடுவித்த வழக்கு தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வமற்ற நீதவானாக கடமையாற்றிய சட்டத்தரணிக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தனியார் மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளராக செயற்பட்ட நபருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது.
எவ்வாறாயினும், வழக்கு விசாரணையின் போது உத்தியோகபூர்வமற்ற நீதவானாக கடமையாற்றிய நிமாலி ஏக்கநாயக்க, உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் இந்த அபராதத்தை விதித்துள்ளதாக வழங்கியுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
குறித்த வழக்கில் தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் முறைப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் விசாரித்துள்ளனர்.
அதன்போது, கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி நிரந்தர நீதவான் விடுமுறையில் இருந்த வேளையில் நகர்த்தல் பத்திரம் மூலம் பிரதிவாதியான பணிப்பாளர் சார்பில் முன்னிலையான பிரதிநிதி, குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், வழக்கு தொடுநர் அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினர் இல்லாத பட்சத்தில் 25,000 ரூபா அபராதம் விதித்துள்ள நிலையில், அவ்வாறு குற்றமிழைத்த முதல் சந்தர்ப்பத்தில் விதிக்கப்படக்கூடிய அபராதம் ஒரு இலட்சம் ரூபாயாகும்.
எனினும், அவ்வாறு செய்யாததன் மூலம், அன்றைய தினம் கடமையாற்றிய உத்தியோகபூர்வமற்ற நீதவான் வழங்கிய உத்தரவு தவறானது என பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, இது தொடர்பான விசாரணையை நீதிச்சேவை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.