இலங்கையில் இன்றும் அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும்!
இலங்கையில் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக பொதுமக்கள் இடைக்கிடையே நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (15) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது
சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.