வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலய ஆலயங்களைத் தரிசிக்க இன்று அனுமதி!
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களைத் தரிசிப்பதற்கு இன்று பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி குறித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களை தரிசித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன் இரண்டாவது நாளாக இன்றைய தினம் கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இப்பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் இராணுவ நடவடிக்கை காரணமாக தாம் இடம்பெயர்ந்து சென்று தற்போது 34 வருடங்களின் பின்னர் இவ்வாலயத்தை வந்தடைந்து தற்போது தரிசிக்கும் வாய்ப்பினை இராணுவத்தினர் ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஆலயத்தின் பூசகர் தெரிவித்தார்.
குறித்த ஆலயங்களுக்கு சென்று வருவதற்கு இராணுவத்தின் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கோயிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் மாத்திரம் ஈடுபட்டு திரும்புவதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் 30க்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தமது ஆலயங்கள் ஆலய சூழலை அண்டிய தமது காணிகள் என்பவற்றை வெகு விரைவில் விடுவித்து தாம் குடியமர்வதற்கு ஏற்றவாறு அவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்