மலையக பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம்

'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மலையக பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம்

கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உட்பட கட்சி பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் இதன்போது கலந்துக் கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அத்துடன், கொட்டகலையில் உள்ள சி.எல்.எப் வளாகம் உட்பட ஏனைய பகுதிகளிலும் ஜனன தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.  

இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார்.

முக்கிய பல அமைச்சுகளை வகித்துள்ளார். இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.