உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
மண்சரிவினால் வீதிகள் தடைப்பட்டுள்ளமையினால் தமக்கு நியமிக்கப்பட்ட நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் சுற்றுப்புறப் பகுதிகளில் பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய மூன்று கல்வி வலயங்களுக்கே குறித்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை (11), மற்றும் வெள்ளிக்கிழமை (12) ஆகிய தினங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, இந்த நாட்களுக்கு பதிலாக இம்மாதமே பதில் கல்வி செயற்பாடுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, திவ்லான அக்ஷா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் கல்லேல்ல அல் அஸ்கர் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியனவற்றை நாளை முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மூடுவதற்கு வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
வலயக் கல்வி பணிப்பாளருக்கு அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.