தமிழக மீனவர்களை சிறையில் சந்திந்த அமைச்சர் ஜீவன் கூறிய முக்கிய தகவல்!
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கைது செய்யப்படும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது.
கடந்த 2023ம் ஆண்டில் மாத்திரம் இலங்கைக் கடற்படையினர் 243 தமிழக மீனவர்களை அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்ததோடு, 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் கடற்றொழிலுக்கு செல்லும் மீனவர்கள் கரைக்கு திரும்பி வருவார்களா என்று அவர்களின் குடும்பத்தினர் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மீனவர்களின் பிரச்சினைக்கு இந்தியா மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளும் சேர்ந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று நேரில் சந்தித்து உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜீவன் தொண்டமான், "யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலுள்ள தமிழக மீனவர்களை சந்தித்து அவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கினேன்.
அவர்களும் புரிந்து கொண்டார்கள். இலங்கை காவல்துறை தங்களை நன்றாக நடத்துவதாக அவர்கள் கூறினார்கள்.
கைதான 43 மீனவர்களில் இருவர் மீது கடத்தல் குற்றச்சாட்டு உள்ளது.
மீதமுள்ள 41 மீனவர்கள் குடும்பத்தினருக்கு அரசு மூலமாக இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் முடிந்த அளவு நிவாரணத்தை அளிப்போம்.
அநேகமாக இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
வடக்கு பகுதியில் உள்ள மீனவர்களும் தமிழர்கள்தான். போரால் பாதிக்கப்பட்ட அவர்கள் சிறிய படகுகளை வைத்து தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டு மீனவர்கள் ரோலர் படகுகள் மூலம் அதிகளவில் மீன்களை பிடிக்கின்றனர்.
இதனால் இலங்கை கடல் வளமும் சேதமடைகின்றது. இது கடல்சார் சட்டங்களை மீறுகிற செயலாகும்.
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிலையான தீர்வு காண்பதற்கு இந்திய அரசிடமும், இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.