வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் - நீதிமன்றத்தின் உத்தரவால் பொலிஸாருக்கு பேரிடி!

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் என்பவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான மற்றுமொரு சந்தேகநபர் அடையாளம் காட்டும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதான இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பொலிஸாரின் தாக்குதலில் குறித்த இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில், யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று முன்னதாக வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதேநேரம், உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இளைஞரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இந்தநிலையில், உயிரிழந்த இளைஞரின் சார்பாக சுமார் 40 சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் சார்பில் மன்றில் முன்னிலையான உதவி பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்தார்.

இந்த சூழ்நிலையில், உயிரிழந்த குறித்த இளைஞருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இளைஞரினால் அடையாளம் காட்டப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.