மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் கோரிக்கை!

மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் கோரிக்கை!

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

 உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு மீனவர்களின் நலன்சார்ந்து மனிதாபிமான முறையில் மீனவர் பிரச்சினையை அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வட மாகாணத்தில் இந்தியாவினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தூத்துக்குடிக்கு வருகைதரும் இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு குறித்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விளக்கமறியல் உத்தரவில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை 10 மணி முதல் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.