ரொஷான் குமார சுடப்பட்டமை குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும்!
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான தகவல்கள் விரைவில் தெரியவரும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொது சுகாதார பரிசோதகர் ரொஷான் குமாரவின் வீட்டிற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நாட்டுக்கு பிரச்சினையானவர்கள் என தெரிவித்தார்.
அத்துடன் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் உள்ளிட்ட தரப்பினரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.