புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தப்படுகிறது - உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் புலனாய்வுத்துறை தேசிய மக்கள் சக்திமயமாக்கப்பட்டுள்ளது.
திசைகாட் டியின் தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் கணவரை உயர் பதவிக்கு நியமிப்பதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 13 உயரதிகாரிகள் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்’’ என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டினார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘புலனாய்வுத் துறையை முடக்குவதென்பது ஒரே நேரத்தில் நாட்டைக் குருடாக்கி செவிடாக் குவது போன்றதாகும்.
புலனாய்வுத் துறையை முடக்குவதால் ஏற்படும் விளைவை 2015 ஆம் ஆண்டில் அவதானித்திருந்தோம். தற்போது வரலாற்றில் எப்போதும் இடம்பெறாதது போன்று ஒருபுறம் புலனாய்வுத் துறை நசுக்கப்பட்டு தூக்கி எறியப்படுகிறது. மறுபுறம் புலனாய்வுத்துறை தேசிய மக்கள் சக்தி மயமாக்கப்பட்டு வருகிறது.
திசைகாட்டி சின்னத்தில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பிரபல செயற்பாட்டாளரான உபேக்ஷா ரணசிங்கவின் கணவரான கேர்ணல் நெவில் அத்தநாயக்க என்பவர் புலனாய்வுத் துறையிலிருக்கும் ஐந்து ஒழுக்காற்று குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்ட கனிஷ்ட அதிகாரி யாவார். இவருக்கு புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் பதவியைப் பெற்றுக்கொடுக்கும் உள்நோக்கத்தின் அடிப்படையில் அவருக்கு மேலிருந்த 13 சிரேஷ்ட அதிகாரிகளை புலனாய்வுத் துறையிலிருந்து நீக்குவதற்கு தற்போ தைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புலனாய்வுத்துறை தொடர்பில் உயர் பயிற் சிகளைப் பெற்றுக்கொண்டுள்ள பிரிகேடியர் பிரபோத சிறிவர்தனவை புலனாய்வுத் துறையிலி ருந்து நீக்கி பாண்ட் அணியின் பணிப்பாளராக நியமித்துள்ளார்.
புலனாய்வுத் துறையில் அதிக தகுதிகளைக் கொண்ட அதிகாரி வேறு ஏதோ செய்துகொண்டிருக்கிறார். அந்த 13 சிரேஷ்ட அதிகாரிகளையும் இடமாற்றம் செய்தாலும் புலனாய்வுத் துறையில் கனிஷ்ட அதிகாரியான கேர்ணல் அத்தநாயக்கவுக்கு பணிப்பாளர் பதவியை வழங்க முடியாது.
அதனால் புலனாய்வுத்துறை தொடர்பில் எவ்வித அனுபமும் இல்லாத இயந்திர பொறியியல் படையணியிலிருந்து மேஜர் ஜெனரல் ஆரிய சேனவுக்கு இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
இவரும் சமூக ஊடகங்களினூடாக தேசிய மக்கள் சக்திக்காக குரல் கொடுத்து இராணுவச் சட்டங்களை மீறிய சிரேஷ்ட அதிகாரியாவார்.
புலனாய்வுத் துறை தொடர்பில் அனுபவம் கொண்ட அதிகாரியொருவராவது இந்த அரசாங் கத்தில் இருந்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட இடமளிக்க மாட்டார்கள்.
அதனால், இவ்வாறு புலனாய்வுத் துறையை முடக்க முயற்சித்தால் மீண்டும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் போன்று பாரிய பாதிப்பு ஏற்பட்டு பிரதான சூத்திர தாரியைக் கண்டுபிடிக்க மேலும் 10 ஆண்டுகளை வீணடிக்க நேரிடுமென்று எச்சரிக்கிறோம்’’ என்றார்.