மத்திய வங்கி ஆளுநர் சபைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!
அரசாங்க நிதி பற்றிய குழுவில் அடுத்த வாரத்தில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மத்திய வங்கி பணியாளர்களின் வேதனம் உயர்வு தொடர்பில் விளக்கம் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 80 (2) (ய) இன் படி நாடாளுமன்றத்துக்கான பொறுப்புக்கூறலுக்கு மத்திய வங்கி உட்பட்டுள்ளதாகவும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி தமது பணியாளர்களின் வேதனத்தை 70 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், இந்த விடயம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரமே இந்த வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.
எனவே, மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய வேதனத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் நியாயம் குறித்து, பொருத்தமான நாடாளுமன்றக் குழுவின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு வாய்ப்பை வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில் ஜனாதிபதியிடம் எழுத்து மூல கோரிக்கையொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.