மூன்று ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் இன்றும் ரத்து செய்யப்பட்டன!

மூன்று ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் இன்றும் ரத்து செய்யப்பட்டன!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிக்கவிருந்த மூன்று ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் இன்றும் (28) ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.25 அளவில் ஹைத்ராபாத் நோக்கி பயணிக்கவிருந்த யு.எல்.177 என்ற விமானமும், 8.55 அளவில் காத்மண்டு நோக்கி பயணிக்கவிருந்த யு.எல்.181 என்ற விமானமும் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இன்று அதிகாலை கோலாலம்பூர் நோக்கி பயணித்த எம்.எச்.178 என்ற விமான சேவையும் ரத்து செய்யப்பட்டதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளின் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்வரும் சில நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்டிருந்த 7 விமான சேவைகள் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டதுடன், இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். 

நேற்றைய தினம் ரத்தான விமான சேவைகளில் ஸ்ரீ லங்கள் விமான சேவைக்கு சொந்தமான 6 விமான சேவைகளும் அடங்குகின்றன.

விமான சேவைகள் இரத்துச் செய்யப்படுவதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கிய சம்பவங்கள் கடந்த சில நாட்களாக பதிவாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது

அந்த கலந்துரையாடலின் போது கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் எமது செய்தி சேவை, ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகேவிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான 6 விமான சேவைகள் நேற்றைய தினம் ரத்தானதாகவும் எதிர்வரும் காலங்களில் அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரம், விமானங்கள் ரத்தாகியமையினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கோருவதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தொழில்நுட்ப கோளாறு, விமானங்களுக்கான உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் சேவையாளர்களுக்கான பற்றாக்குறை என்பனவும் அவற்றில் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.