அமேசன் காடுகளில் பழமை வாய்ந்த நகரம் கண்டு பிடிப்பு!
அமேசன் காடுகளில் மிகப்பழமை வாய்ந்த நகரம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பசுமையான தாவரங்களினால் மறைக்கப்பட்ட இந்த பண்டைய நகரம் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு மூலம் அமேசனில் வாழும் மக்களின் வரலாற்றை பற்றி அறிந்துள்ள விடயங்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஈக்வேட்டரில் உள்ள உபானோ பகுதியில் உள்ள வீடுகள், வீதிகள் மற்றும் கால்வாய்கள் அற்புதமான வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதி எரிமலையின் அடிவாரத்தில் உள்ளதன் காரணமாக சிறந்த மண் உருவாகியுள்ள போதிலும் அங்கு வாழ்ந்த முழு சமூகத்தின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தென் அமெரிக்காவின் பெரு போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பண்டைய நகரங்களை பற்றிய தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்த போதிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நகரத்தில் சிறிய அளவிலான சமூகம் ஒன்று வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நகரம் போன்றதொன்று முன்னர் இனம் காணப்படவில்லை.
குறிப்பிட்ட நகரத்தை ஆராயும் பொழுது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சிறந்த கலாச்சாரம் மற்றும் நாகரீகமான மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்சை தளமாக கொண்டுள்ள தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியர் ஸ்ரிஃபன் ரொஸ்ரெய்ன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த நகரம் 2,500 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்பதுடன் அங்கு மக்கள் 1,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என புதைபொருள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையினை மதிப்பிடுவது கடினமான விடயம் என தெரிவித்துள்ள அவர்கள், எப்படியிருப்பினும் 10,000 மக்கள் வாழ்ந்திருக்கலாம் என மதிப்பிடலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
விஞ்ஞானிகளினால் சுமார் 300 சதுர கிலோ மீற்றர் அடையாளம் இடப்பட்டுள்ளது.
வாநூர்தி மூலம் இந்த பிரதேசத்திற்கு மேலாக பயணிக்கும் போது இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அந்த பிரதேசத்தை அண்டியுள்ள பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.