மலையக தொழிற்சங்க நெருக்கடிகளை விளக்க அமைச்சர் ஜீவன் ஜெனிவா செல்கிறார்!
மலையக தொழிற்சங்க நெருக்கடிகளை சர்வதேசத்தின் முன் விளக்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று (11) பயணிக்கவுள்ளார்.
சர்வதேச நாடுகளின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அமைச்சர் ஜெனிவாவுக்கு செல்கிறார். ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையே இந்தக்கூட்டம் நடைபெறுகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்கவும் அமைச்சருடன் செல்லவுள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரையும் இவ்விஜயத்தின் போது சந்தித்து அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதுடன், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இதுதவிர, 'மலையகம் - 200' நிகழ்வு தொடர்பாகவும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.