அமைச்சர் ஜீவனை கைது செய்யுமாறு நுவரெலியா நீதிமன்றம் உத்தரவு!

களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அவரது சகாக்களுக்கு எதிராக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையிட்டு இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நீதிபதி ஜயமினி அம்பகஹவத்தவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பாக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட , வழக்கறிஞர் பாலித சுபசிங்க மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் கயான் ஆகிய மூன்று வழக்கறிஞர்களும் முன்னிலையாகியிருந்தனர்.
இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவர் சார்ந்த ஏனையவர்களுக்கு இன்று வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகை தரும்படி நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
இருப்பினும், இன்றைய தினம் குறித்த வழக்குக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகை தரவில்லை என்பதால் இது தொடர்பான மேலதிக தகவல்களை நுவரெலியா பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்ததையடுத்து தகவல்களை பரிசீலனை செய்த நீதிபதி ஜயமினி அம்பகஹவத்த இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக்கும்படி உத்தரவிட்டார்.