சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு!
நேற்று நள்ளிரவு முதல் சுகாதார தொழிற்சங்கங்கள் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதனையடுத்து தங்களது தொழிற்சங்க நடவடிக்கையை ஒரு வாரத்துக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார அமைச்சு, நிதியமைச்சு மற்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் என்பவற்றை உள்ளடக்கி, தங்களது பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் இதன்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.