நாளை அரச வங்கிகள் மாத்திரம் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படும்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் நாளை அரச வங்கிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அரச வங்கிகள் மாத்திரம் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படும்!

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரச வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்ற நிலையில் நலன்புரி கொடுப்பனவுக்காக நாளைய தினம் வங்கிகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். 

தற்போது ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு மிக விரைவில் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் குறித்த ஒரு நாளில் இந்தக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த முதியோர், சிறுநீரக நோயாளர் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்களை வழங்கினார்.

இதன்படி, அஸ்வெசும நலன்புரி உதவியைப்பெற தகுதியுடைய 15 இலட்சம் குடும்பங்களில் முதற்கட்டமாக 7 இலட்சத்து 91 ஆயிரம் குடும்பங்களின் கணக்குகளில் சுமார் 5 பில்லியன் ரூபா வைப்பிலிட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 6 இலட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஒரு இலட்சத்து 11 ஆயிரம் பயனாளிகளுக்கு அடுத்த சில நாட்களில் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

இரண்டாவது குழுவுக்கான கொடுப்பனவுகளை அடுத்த வாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்குள் இந்தத் தொகை முழுவதையும் வைப்பிலிட்டு நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நலன்புரி திட்டத்தில் தகுதி பெற்ற அனைவரும் கொடுப்பனவுகளை  பெற்றுக்கொள்வார்கள் எனவும் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை எனவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.