கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானம்!

கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பிள்ளைகள் குறித்து  பெற்றோர் அவதானம்!

கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்து இலங்கையில் உள்ள பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் 19 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள அல்கோன்குவின் கல்லூரியில் குறித்த சந்தேகநபர் பயில்வதனை அந்த கல்லூரி உறுதிப்படுத்தியுள்ளது.

அவர் இறுதியாக 2023ஆம் ஆண்டின் குளிர் காலத்தில் கல்லூரிக்கு சமூகமளித்திருந்ததாக கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் இருந்து கல்வி செயற்பாடுகளுக்காக இடம்பெயரும் மாணவர்கள் வெளிநாடுகளில் புதிய சமூகம் மற்றும் உளவியல் சூழலை எதிர்கொள்வதனால் அவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என டொரொன்டோவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்கலாக 6 இலங்கையர்கள் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.

35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயும் அவரது  ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதங்களேயான குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.

குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது முகத்திலும் கையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

கத்தி அல்லது அது போன்ற கூரிய ஆயுதத்தினால் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.