பிரதமர் மோடியின் பதவியேற்பு ஒத்திவைப்பு? நேருவின் சாதனை முறியடிப்பு!

பிரதமர் மோடியின் பதவியேற்பு ஒத்திவைப்பு? நேருவின் சாதனை முறியடிப்பு!

தலைநகர் புதுடெல்லியில் ஜூன் 9-ம் திகதி மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூன் 8ம் திகதி பிரதமர் மோடி பதவியேற்பார் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த நிகழ்வு ஒருநாள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பதவியேற்பு விழாவில் தெற்காசிய தலைவர்கள் பலர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவிருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்களை தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. 

புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரிந்துரைத்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெயபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரையையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். 

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசு அமையும் வரை பதவியில் தொடருமாறு பிரதமரையும், மத்திய அமைச்சரவை குழுவையும் கேட்டுக் கொண்டார்.

பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான், மஜத தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை பிரதமர் மோடியிடம் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவதாகவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நாளை (7) நடைபெற உள்ளது. 

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும், கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களவை குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். 

தொடர்ந்து பிரதமர் மோடி பதவியேற்பு விழா எதிர்வரும் 9-ம் திகதி மாலை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்பதன் மூலம், தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.