ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் : ஆண்டாள் யானையிடம் ஆசி!
பிரசித்தி பெற்றதும், 108 வைணவத்தலங்களுள் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (20) முற்பகல் சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்று மாலை தமிழகம் சென்ற பிரதமர், சென்னையில் 2023 ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழக பயணத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற பிரதமர், அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலமாக பஞ்சகரை சாலைக்கு சென்று அங்கிருந்து வீதிவழியாக ஸ்ரீரங்கம் கோயிலை அடந்தார்.
அங்கு அவர் முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை :
தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் பிரவேசித்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கருடாழ்வார் மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு 'மவுத் ஆர்கன்' வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து இராமாயண பாராயணத்தைக் கேட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனத்தின் போது தமிழ் கலாச்சார உடையான வேஷ்டி சட்டையில் இருந்தார்.
பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமரின் சுவாமி தரிசனத்தை முன்னிட்டு பகல் 2.30 மணி வரை பொது மக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
சுவாமி தரிசனத்துக்காக வீதி வழியாக பிரதமர் வந்தபோது வீதிகளின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சியில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்குச் சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு சென்றார்.
வரவேற்பு அளித்த பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்ற பிரதமர் மோடி
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள இராமர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதற்கான நிகழ்ச்சியை முக்கிய பிரமுகராக இருந்து பிரதமர் நரேந்திர மோடி நடத்த உள்ளார்.
இதை முன்னிட்டு 11 நாள் விரதம் இருந்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, இராமாயணத்துடன் தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார்.
அந்த வகையில், ராமரும் சீதையும் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.
இதனையடுத்து, ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு இராமநாத சுவாமியை வழிபட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.