தமிழருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விராட் கோஹ்லியின் உணவகம்!
இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி மும்பை பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், இந்த உணவகத்துக்கு தமிழ் கலாச்சார முறைப்படி சென்ற தமிழருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த ராவண ராம் என்ற பாடகர் சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பதிவு செய்து பிரபலமானவர்.
இவர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பையில் உள்ள உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக வேட்டி சட்டையில் சென்றுள்ளார்.
அந்த உணவகத்தில் வேட்டி சட்டை அணிந்து செல்ல அனுமதி இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் அந்த உணவகம் முன் நின்று தனக்கு நடந்த சம்பவத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
இதற்கு பலரும் கண்டனம் மற்றும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.