தியாக தீபம் திலீபனின் நினைவு பேரணிக்கு அக்கரைப்பற்றில் எதிர்ப்பு - பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரை பயணம்!
ஈழ விடியலுக்காக தன்னுயிரையும் தியாகம் செய்து உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு உயிரிழந்த தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரையில் இடம்பெறும் நினைவு பேரணிக்கு அக்கரைப்பற்றில் நேற்று எதிர்ப்பு வெளியிடப்பட்டமையை அடுத்து அங்கு பதற்ற நிலை தோன்றியது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த வாகன பேரணி பொத்துவில் நகரில் நேற்று (15) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வாகன பேரணி செல்லும் வீதியின் இருமருங்கிலும் மக்கள் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், அக்கரைப்பற்று பகுதியில் பதாகைகளை ஏந்திய சிலர் வீதியை மறைத்து குறித்த வாகன பேரணிக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
முஸ்லீம் மக்களுக்கு எதிராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சர்வதேசத்தை வலியுறுத்துவதாக தெரிவித்து அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து அக்கரைப்பற்று நகரில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து வாகன பேரணி மாற்று வீதியில் பயணித்துள்ளது.
உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு உயிரிழந்த தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் வாகன பேரணி இன்றைய தினம் களுவாஞ்சிக்குடியில் இருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளது.