கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு - பல கிராமங்களுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை - உயிரிழப்பு 17.
நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் மேலும் பல கிராமங்களுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திஹாகொட, மாத்தறை, மாலிம்பட ஆகிய பிரதேசங்களில் உள்ள பல கிராமங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் பிரிவு பணிப்பாளர் S.P.C.சுகீஸ்வர தெரிவித்தார்.
இதேவேளை, அத்தனகலு ஓயா, கிங் கங்கை, களனி மற்றும் களு கங்கைகள் தொடர்ந்தும் அபாய மட்டத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தனகலு ஓயா பெருக்கெடுத்ததால் கம்பஹா நகரம் தொடர்ந்தும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.
கம்பஹா வைத்தியசாலை வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் வைத்தியசாலையில்தங்கியுள்ள நோயாளர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.