குற்றவியல் திருத்த சட்டத்தை மீளப்பெறாவிடின் போராட்டம் - எதிர்க்கட்சி தலைவர் சஜித்!

அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குற்றத்தை தடுப்பதற்கு அன்றி குற்றத்தை அதிகரிப்பதற்காகவே ஆகும்.

பாலியல் நடவடிக்கைகளுக்கு விருப்பம் தெரிவிக்கும் வயதெல்லையை 16 ல் இருந்து 14 ஆக குறைக்கவுள்ளதாகவும் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் தலைவிரித்தாடும் இக்காலத்தில் இதுவே அரசாங்கத்தின் தீர்வாக உள்ளதாகவும், இது துஷ்பிரயோகங்களை அதிகரிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெண்ணை துஷ்பிரயோகம் செய்த ஆணின் வயது 22 க்கு உட்பட்டதாக இருப்பின் தண்டனையை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது பெண்களை இழிவுப்படுத்தும் நடவடிக்கையாகும்.

மேலும், பல்வேறு வழக்குகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கென 363 சரத்தின் படி ஏற்பாடுகள் பிரத்தியேகமாக இருக்கையில் ஆண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகுவது தொடர்பான சட்டத்தையும் அதனுடன் இணைப்பது பெண் துஷ்பிரயோக சட்டத்தை தரம் தாழ்த்துவதாக அமையும் என்றும் குற்றவியல் சட்டத்தில் திருத்த செய்வது பெண்கள் உரிமையை பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் மனசாட்சிக்கு உட்பட்டு நடந்தால் குற்றவியல் திருத்த சட்டமூல வரைபை உடன் மீளப்பெற வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியே வீதியிலும் பாரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.

இன்று (31) பதுளை வீல்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெறுமனே ஏமாற்று வித்தைகளை நம்பி தீவிர சோசலிஸ கொள்கையின் ஊடாக தொழிற்சாலைகளை கொழுத்திய சீரழிவுமிக்க யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைய கூடாது என்றும் நாசமிக்க தீவிர சோசலிஸ யுகத்திற்கு பதிலாக தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் யுகத்தையே உருவாக்க வேண்டும் என்றும் மாற்று அரசியல் அணி என கூறிக்கொள்வோரின் பிரச்சார கூட்டங்களில் 220 இலட்சம் மக்களையும் மதமற்ற கொள்கையில் ஈர்க்க முனைவதாகவும் குறித்த அரசியல் அணி மத கொள்கைக்கு எதிரானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கென ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி செயலணி அமைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்தை திருடி தங்களது திட்டங்கள் என ஒரு சில அரசியல் கட்சிகள் காட்ட முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெண்களுக்காக அதிகபட்ச பலத்தையும் வலுவூட்டுதலையும் வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண் துஷ்பிரயோகத்திற்கு தனி சட்டம் கொண்டுவரப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.

அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வந்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை அடிப்படை உரிமைகளாக மாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து பிரதேச செயலக மற்றும் உப பிரதேச செயலக பிரிவுகளிலும் மகளிர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை ஸ்தாபித்து திறமைகளுடன் கூடிய ஸ்மார்ட் பெண்களை உருவாக்குவதாகவும் நுண்நிதி கடன் மூலம் சிக்கி தவிக்கும் பெண்களை மீட்பதாவும் பெண்களை மையப்படுத்திய நலன்புரி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டிலும், வீதிகளிலும், பணியிடங்களிலும் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களின் உரிமைகளை விசேட அரச கொள்கையின் ஊடாக பாதுகாப்பதாகவும் பெண்களின் சுகாதார மேம்பாட்டுக்கு பிரத்தியேக வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணியையும் ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதாகவும் பெண்களுக்காக அதிக சேவையை முன்னெடுக்கும் ஆட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

76 வருட அரசியல் வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் முன்னெடுக்காத மக்கள் சேவையை ஐக்கிய மக்கள் சக்தி கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுத்து வருவதாகவும் தற்போது ஏனைய எதிர்க்கட்சிகள் வாயாடல்களில் மாத்திரமே திறன் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.