மகளிரை வலுவூட்ட விசேட கடன் திட்டம்!
பொருளாதார நடவடிக்கைகளின் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் விசேட கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2 பில்லியன் ரூபா பெறுமதியான கடன் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஏனைய பிராந்திய மற்றும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதார விவகாரங்களில் மகளிர்ன் பங்களிப்பு குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொழிற்படை தொடர்பான 2022ம் ஆண்டின் ஆய்வுக்கமைய பொருளாதார ரீதியாக செயற்பாட்டிலிருந்தவர்களில் 32% பெண்கள் என சுட்டிக்காட்டப்பட்டது.
பொருளாதார ஈடுபாடுகளில் பாலின பங்களிப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்களவு ஏற்றத்தாழ்வுகளை இது வெளிப்படுத்துகிறது.
பெண்களின் மட்டுப்படுத்தப்பட்ட நிதியறிவு மற்றும் கடன் பெறுவதற்கு போதுமான வளங்கள் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களினால் நிதி வளங்களை அணுகுவதற்கான வாய்ப்புக்களும் அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.
பெண் தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய தடைகளாக இவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கமைய, தொழிற்துறையை பலப்படுத்துவதற்கான முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த 20 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 2 பில்லியன் ரூபாவை குறித்த யோசனைக்கமைய பயன்படுத்தப்படவுள்ளது. இதன்காரணமாக, பெண்களின் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த விசேட கடன் திட்டம் அடங்கிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.