விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் - புதிய அமைச்சர் நியமனம்!

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் - புதிய அமைச்சர் நியமனம்!

ரொஷான் ரணசிங்க, நீர்பாசனம், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் என அனைத்து விதமான அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ICC தடை விதித்ததுடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் நிலவி வருகின்றன.

இந்தநிலையிலேயே அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தற்போதைய சூழலில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும், ஜனாதிபதியும், சாகல ரத்நாயக்கவுமே ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

தமது வாழ்க்கை தொடர்பில், நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

134 பேர் வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருப்பினும், அவர் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், பாதுகாப்பு அவசியமாகும் என அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னிலையில் இன்று மாலை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

சுற்றுலாத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நீர்ப்பாசனத்துறை அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக இந்த அமைச்சுப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.