இலங்கை ஆட்சியாளர்கள் பாரிய தேயிலை நிறுவனங்களின் அடிமைகளாகியுள்ளனர் - சஜித் பிரேமதாச!
பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட விடயங்களை புறக்கணித்து சேதன உரக் கொள்கையை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தியதால், நாட்டில் தேயிலை உற்பத்தி 35% குறைந்துள்ளது.
U877, T1130 போன்ற தேயிலை உரங்களின் விலைகள் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.
10 கிலோ 11,500 ரூபா என்பதால் தேயிலை செய்கையில் ஈடுபட்டுள்ள எமது சமூகம் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க உரத்தை பயன்படுத்தாமல் இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேசிய உற்பத்தி 35% வீழ்ச்சியடைந்துள்ள இவ்வேளையில், 3 மாதங்களுக்கு ஒரு முறை உரம் இடும் போது, நாட்டில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், வலுப்படுத்தவும், தேசிய தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தவும் இந்த உரத்திற்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.
3 பருவகாலத்திற்கேனும் உர மானியம் வழங்கி தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது தேசிய பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் சிறிய அளவிலான தேயிலை உற்பத்திக்கான காணிகளை வைத்திருக்கும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நாட்டின் தேயிலை உற்பத்தியில் 60-70% பங்களிப்பை வழங்குகின்றனர்.
தேசிய தேயிலை உற்பத்திக்கு அதிகளவான காணிகளைக் கொண்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த பட்ச பங்களிப்பான 30% வழங்குவதால் ஆயிரக்கணக்கான தேயிலை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கும் இவ்வேளையில், விவசாயம் மேற்கொள்ளப்படாத இந்த நிலத்தின் உரிமையை இளைஞர்களுக்கும், குடிமக்களுக்கும் வழங்கி, நிலத்தின் உரிமையையும் மூலதனத்தையும் இளைஞர்களுக்கு வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் முயற்சிகளை முன்னெடுக்கலாம். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் இது ஒரு வழியாக அமையும்.
காலா காலமாக தொழிலாளர்களாக இருந்து வரும் மலையக மக்களுக்கும் இது ஒரு தீர்வாக அமையும்.
ஆனால், இந்நாட்டில் அரசாங்கம் பாரிய நிறுவனங்களின் அடிமைகளாக இருப்பதால் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
லெல்லுப்பிட்டிய, ஸ்ரீ கல்யாண போதிராஜாராம விகாரையில் நிர்மாணிக்கப்படவுள்ள சைத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று(27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காணிகளை சிறு தேயிலை தோட்டங்களாக அபிவிருத்தி செய்து, தொழிலற்ற இளைஞர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம்.
லயன் அறைகளில் வாழும் தொழிலாளர்களுக்கும் விவசாயம் செய்யப்படாத காணிகள் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் பிரச்சாரங்களுக்கு மதத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது.
எமது நாட்டில் பெரும்பாலானோர் சம்புத்த சாசனம் குறித்தும் பௌத்தம் குறித்தும் நாம் பெரியளவில் கருத்துக்களை வெளியிட்டாலும், பௌத்தத்தின் உண்மையான அர்த்தத்தில் சமயத்தைப் பாதுகாப்பதும் சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதுமே காலத்தின் தேவையாகும்.
ஏனைய இன சமூகங்களை புறம் ஒதுக்கிய ஒன்றாக இது அமைந்து விடக்கூடாது.
இந்த அக்கறைக்காக அனைத்து பௌத்த சமூகமும் அணிதிரளப்பட வேண்டும்.
இனிமேலாவது பௌத்த மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி அரசியல் பிரச்சாரம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.