சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

தனமல்வில தேசிய பாடசாலையின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பாடசாலை மாணவர்கள் மூவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெண்ணும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (22) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பண்டாரவளை நன்னடத்தை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 14 மாணவர்களையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன், அவர்களை மீண்டும் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தை மூடி மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இன்று நீதிமன்றில் ஆஜராகியதுடன், அவர்களை எதிர்வரும் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது பல பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.