ரயில் இயந்திர சாரதிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? இன்று தீர்மானமிக்க பேச்சுவார்த்தை!
ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது
ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக 26 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையின் முயற்சிகளை கண்டித்து க சாரதிகள் சங்கம் நேற்றுமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதன் காரணமாக நேற்று சுமார் 21 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் இன்று 26 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
”பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தடுப்பதற்காக செயல்படுத்தப்படும் ரயில் சேவைகளை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்கிறோம்.
சில ரயில்கள் நிறுத்தப்படாத புகையிரத நிலையங்களிலும் நிறுத்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அவர்களது கோரிக்கைகள் உரிய வகையில் ரயில்வே திணைக்களத்துக்கு முன்வைக்கப்படவில்லை.
கோரிக்கைகள் என்னவென்றுகூட தெளிவாக கூறவும் இல்லை“ – என்று தெரிவித்தார்.
பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட பயணி ஒருவர், “உரிய நேரத்துக்கான ரயில் சேவைகள் இல்லாது மிகவும் பாதிப்படைந்துள்ளோம். பல மணிநேரம் காத்திருந்தே கொழும்புக்கு வந்துள்ளேன்.
எங்கள் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது? அவர்கள் எதற்கு போராடுகிறார்கள்? அரசாங்கம் இவர்களது பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது நல்லது.
எவர் போராட்டத்தை முன்னெடுத்தாலும் பாதிக்கப்படுவது பயணிகளாகவே உள்ளனர்” என்றார்.
ரயில் சேவையை தரமான சேவையாக மாற்றுவோம் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இந்திக தொடங்கொட கருத்து வெளியிடுகையில், வேறு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ரயில்கள் ரயில் இன்ஜின் சாரதிகள் சங்கத்துக்கு வழங்கப்படடுள்ளன.
இதனால் அவர்கள் குழப்பமடைந்துள்ளதுடன், விடுமுறைகளை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஆகவே, இவர்களது போராட்டத்துக்கு போக்குவரத்து பொது முகாமையாளர் உரிய தீர்வை வழங்க வேண்டும்” என்றார்.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன வெயன்துவ கூறினார்.