இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வரவு செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

உள்நாட்டுப் மோதல்களின் போது இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வரவு செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளக முறுகல் நிலை முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்துள்ளன.

எனினும், சில குடும்பங்கள், அந்த பிரதேசங்களில் வீடற்ற நிலையிலேயே வாழ்வதாக ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி வீடற்ற குடும்பங்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்குவதற்கும் மேலதிக ஏற்பாடாக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காணாமல் போன 181 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 170 பேருக்கு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் 5,300 க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் இழப்பீடுகளுக்காக 1,500 மில்லியன் ரூபாய் ஏற்கனவே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த இழப்பீடுகளை விரைவாக வழங்க, 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.